மும்பையில் மராத்தா இடஒதுக்கீடு கோரி நடைபெறும் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்வலர் மனோஜ் ஜராங்கே-பாட்டீல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பேன்ட்ஸில் தென்பட்ட மஞ்சள் கறைகள் குறித்து எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.

“இந்த மஞ்சள் கறை பூக்களால் ஏற்பட்டது,” என்று கூறி, பேன்ட்ஸை கூட்டத்தினருக்கும் கேமராக்களுக்கும் காட்டி, “இதை உங்க அப்பாவுக்கோ, உங்க அம்மாவோட கணவருக்கோ காட்டு!” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். மேலும், “எந்த அரசியல்வாதி இந்த மஞ்சள் கறையை பார்க்க விரும்புறானோ, அவனுக்கு காட்டுறேன். இப்போ உள்ளாடையையும் காட்டணுமா?” என்று கேள்வி எழுப்பி, சர்ச்சையை தீர்க்க முயன்றார். இந்த பேச்சு இணையத்தில் பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆகஸ்ட் 29 அன்று தொடங்கிய இந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தை மனோஜ் ஜராங்கே-பாட்டீல் தலைமையேற்று நடத்தி வருகிறார். மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும் வரை மும்பையை விட்டு வெளியேற மாட்டேன் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஆசாத் மைதானம் பகுதியில் சுமார் 200 வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் திங்கட்கிழமை வரை நீடித்தால், தெற்கு மும்பையில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனை கருத்தில் கொண்டு, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் காவல்துறை திட்டமிடத் தொடங்கியுள்ளது.