தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமணி (56) மற்றும் பனைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (56) ஆகியோர் நண்பர்கள். இருவரும் உடைமரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஒரே நேரத்தில் வேலைக்கு செல்லும் இருவரும் மாலை நேரங்களில் டாஸ்மாக் பாருக்குச் சென்று ஒன்றாக மது அருந்துவது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையிலும் நேற்று மாலை பேய்க்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்பு வெளியே வந்தபோது, “மது வாங்குவதற்கு தினமும் நான்தான் பணம் செலவழிக்கிறேன், நீ ஒருமுறை கூட வாங்கி தரலை” என சுடலைமணி கூறியதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது தீவிர மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த செல்வகுமார், தன்னிடம் இருந்த அரிவாளால் சுடலைமணியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்த, சாத்தான்குளம் போலீசார் தகவலறிந்து விரைந்து வந்து, காயமடைந்த சுடலைமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
