திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகே சத்தரை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் சௌமியா (24) என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து, கடம்பத்தூரில் வீடு எடுத்துக்கொண்டு தங்கியுள்ளனர். வேலை காரணமாக சௌமியா தனியாக அலுவலகம் சென்று வருவதை வழக்கமாக செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி மாலை சௌமியா வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் போது சத்தரை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த அருண் (அ) ராஜேஷ் (28), சாலையில் அவரை வழிமறித்து, அணிந்திருந்த ஷாலை பிடித்து இழுத்து, தனிமையில் வர  வற்புறுத்தி, அவதூறான வார்த்தைகள் பேசியுள்ளார். மேலும் கையை பிடித்து இழுத்து, பைக்கில் ஏறுமாறு கட்டாயப்படுத்திய நிலையில், சௌமியா தப்பிக்க முயன்ற நிலையில் அருண் அவருடைய செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

இதனை தொடர்ந்து சௌமியா தனது கணவர் ராஜ்குமாரிடம் கூற, ஆத்திரமடைந்த ராஜ்குமார் அருணிடம் நேரில் சென்று கேட்டபோது, அருணுடன் கூடிய சத்தரை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கோபி, பேரம்பாக்கத்தைச் சேர்ந்த கபிலன் (அ) துளசி, அருந்ததியர் காலனியைச் சேர்ந்த மனோஜ் மற்றும் கம்பத்தூரைச் சேர்ந்த பாபு ஆகியோர் இணைந்து, ராஜ்குமாரை அத்துமீறி தாக்கியுள்ளனர்.

இவர்கள் ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் அடித்தும், காலால் உதைத்தும், கத்தி கொண்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தும் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ராஜ்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு கடம்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சௌமியா மப்பேடு போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் அருண், கோபி, கபிலன் மற்றும் மனோஜ் ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பாபுவை தேடி வருகின்றனர்.

சாலையில் நடக்கும் பெண்களுக்கு இளைஞர்கள் தொல்லை தரும் நிலை ஏற்பட்டு வருவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனியாக வேலைக்கு செல்லும் பெண்ணிடம் இளையர் கும்பல் ஏற்படுத்திய பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.