ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் சர்நடா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சு பிஷோனி, பிட்கன்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கும் திலீப் பிஷோனி என்பவருக்கும் 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு யாஷ்வி என்ற 3 வயது மகளும் இருந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக சஞ்சுவுக்கு தனது கணவர், மாமனார் மற்றும் மாமியாருடன் குடும்பப் பிரச்சினை நிலவியிருந்தது. மேலும், கூடுதல் வரதட்சணை கேட்டு மாமனார் மற்றும் மாமியார் சஞ்சுவை தொடர்ந்து தொந்தரவு செய்துவந்தனர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய சஞ்சுவிடம் மீண்டும் மாமியார்-மாமனார் வாதாடியதாக கூறப்படுகிறது. விரக்தியடைந்த சஞ்சு, தனது 3 வயது மகள் யாஷ்வியை அழைத்து, வீட்டிலுள்ள அறைக்குள் சென்றார். அங்கு பெட்ரோலை தன் மீதும், மகளின் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இந்த சோக சம்பவத்தில் யாஷ்வி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். சஞ்சுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சஞ்சு சனிக்கிழமை  உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, அவரது கணவர் மற்றும் மாமியாரை விசாரித்து வருகின்றனர். இந்த துயர சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.