அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் ஒரு தாய் மற்றும் மகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. அதாவது ஓபிலியா (பெயர் மாற்றப்பட்டது) தனது 13 வயது மகளை பற்களுக்கு பிரேஸ் பொருத்துவதற்காக ஆர்த்தோடான்டிஸ்ட்டிடம் அழைத்துச் சென்றார்.
ஆனால், எக்ஸ்-ரே அறிக்கையில் ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயம் தெரியவரும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை. எக்ஸ்-ரே படத்தில், மகளின் சைனஸில் ஒரு சிறிய உலோகத் துண்டு சிக்கியிருப்பது தெரிந்தது. இது எப்படி அங்கு சென்றது என ஓபிலியாவால் புரிந்து கொள்ள முடியவில்லை,
ஆனால் அவரது மகளோ உடனடியாக உண்மையை உணர்ந்தாள். ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது நண்பர் ஒருவர் மூக்கு குத்தியதைப் பார்த்து, இந்தப் பெண்ணும் தனது தாயிடம் மூக்கு குத்த அனுமதி கேட்டிருந்தாள். ஆனால், 16 வயது வரை காத்திருக்க வேண்டும் என தாய் மறுத்துவிட்டார். இருப்பினும், தனது தாயின் மறுப்பை புறக்கணித்து, அந்தப் பெண் ஆபத்தான முடிவு எடுத்திருந்தாள்.
இந்த 13 வயது பெண்ணுக்கு கடுமையான ADHD (கவனக்குறைவு மற்றும் அதீத செயல்பாடு கோளாறு) இருந்ததால், அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காது குத்த பயன்படுத்திய கம்மலை எடுத்து, தானே மூக்கு குத்த முயற்சித்தாள். முதலில் வெளிப்புறமாக அழுத்தினாள், பின்னர் உள்ளிருந்து தள்ள முயன்றபோது, தும்மல் அல்லது தவறுதலாக தவறான திசையில் அழுத்தியதால், அந்த கம்மல் மூச்சுடன் உள்ளே சென்று சைனஸில் சிக்கிக் கொண்டது.
இதைப் பற்றி தனது தாயிடம் எதுவும் சொல்லாமல், வலி இல்லாததால் அது தொண்டையில் இறங்கிவிட்டதாக நினைத்து மறந்துவிட்டாள். பிரேஸ் பொருத்துவதற்காக எடுக்கப்பட்ட எக்ஸ்-ரேயில் இந்த ரகசியம் வெளிப்பட்டது. இந்த எக்ஸ்-ரே அறிக்கை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று வைரலானது.
அதிர்ஷ்டவசமாக, ஓபிலியா உடனடியாக ENT மருத்துவரை அணுகினார். அவர், மகளின் டான்சில்களை முன்பு அகற்றியவர். நீண்ட மருத்துவ கருவியைப் பயன்படுத்தி, வலியின்றி அந்த கம்மலை மருத்துவர் அகற்றினார், பெண்ணுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை.
