இன்னொரு பெரிய சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இடம் அளித்திருக்கிறார். பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் சுமார் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியதாக தெரிவிக்கப்படும் விவகாரம் வெகுவாகவே பேசப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்து, இது வாக்கு திருட்டு என்று குற்றஞ்சாட்டுகின்றன.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், திருச்சூர் எம்.பி. மற்றும் மத்திய மந்திரி சுரேஷ் கோபி, இந்த குற்றச்சாட்டுகளை வெளியிட்டவர்களை “வானரங்கள்” (குரங்குகள்) என அவமதிக்கும் வகையில் பேசியிருக்கிறார். மேலும், அவர்கள் பதில்கள் தேவைப்பட்டால் “நீதிமன்றத்திற்கு செல்லலாம்” எனவும் கூறியிருப்பது புதிய சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.

சுரேஷ் கோபியின் இந்த பேச்சை தொடர்ந்து, கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் கடும் கண்டனத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், “சுரேஷ் கோபியின் பேச்சு ஜனநாயக விரோதமானது. அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள், பேச்சுகளில் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் குறித்த புகார்கள் ஜனநாயக செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் முக்கியமானவை. அத்தகைய புகார்களை கேலி செய்வதும், அவமானப்படுத்துவதும் குடிமக்களின் ஜனநாயக நம்பிக்கையை சிதைக்கும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.