ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரி (30), எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படித்த திறமையான மருத்துவர். மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த அவர், கோடம்பாக்கத்தில் தாயுடன் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மென்பொருள் இன்ஜினீயர் யோதீஸ்வரனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் மூன்று மாதங்களே கணவன்–மனைவி ஒன்றாக வாழ்ந்த நிலையில், இடையே ஏற்பட்ட தகராறால் யோதீஸ்வரன் சொந்த ஊருக்கே சென்று அங்கிருந்து வேலை பார்த்தார்.
சுதந்திர தின விடுமுறை காரணமாக ஜோதீஸ்வரி, பெருங்களத்தூர் ஸ்ரீராம் கேட்டில் வசிக்கும் அக்கா முத்துலட்சுமி வீட்டுக்கு சென்றார். மாலையில் கிளம்புவதாகச் சொல்லிவிட்டு, கீழே செல்லாமல் 12–வது மாடிக்கு சென்று, மொட்டையிலே தனது செருப்பு, கைப்பையை கழற்றி வைத்து குதித்தார்.
தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பீர்க்கன்காரணை போலீசார் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆனது 10 மாதங்களே ஆகின்றதால், வழக்கு தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், ஜோதீஸ்வரி எழுதிய உருக்கமான தற்கொலைக் கடிதம் போலீசாரிடம் கிடைத்தது. அதில், கணவர் யோதீஸ்வரன் மனைவிக்கு முக்கியத்துவம் அளிக்காமல், கஞ்சா உள்ளிட்ட தீய பழக்கங்களில் ஈடுபட்டதோடு, டேட்டிங் செயலி வழியாக 30–க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கணவரின் லேப்டாப்பை பார்த்தபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்ததால் மனம் உடைந்ததாகவும், இதுவே தற்கொலைக்கு காரணம் எனவும் அந்தக் கடிதத்தில் பதிவாகியிருந்தது. இந்த சோகச் சம்பவம் மருத்துவர்கள் வட்டாரத்திலும், ராமநாதபுரம் மக்களிடமும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
