சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்னிந்தியாவில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று  (ஆகஸ்ட் 16) முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17 முதல் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை தொடர்ச்சியாக பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேசமயம், தென் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.