கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி சசிகுமார் (45). இவர் பாளையங்கோட்டை ஆயுதப் படையில் தலைமை காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சசிகுமாருக்கு நெருக்கமான உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அந்த குடும்பத்தில் உள்ள ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறிய போது அவர் அதனை கண்டு கொள்ளாதது போல் இருந்துள்ளார்.

அதனால் மனம் உடைந்த சிறுமி தனது பள்ளியில் படிக்கும் சக மாணவிகளிடம் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்துள்ளார். அப்போது சக மாணவிகள் “ஒன் ஸ்டாப்” என்ற பெண் பாதுகாப்பு அமைப்பிற்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை பற்றி கூற அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி அந்த மாணவியும் தெரிவித்ததை அடுத்து குழந்தைகள் நலன் சார்ந்த அதிகாரிகள் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் பெயரில் சிறுமியிடம் புகாரைப் பெற்ற காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் அதிகாரி சசிகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே சசிக்குமாருக்கும் அந்த சிறுமியின் தாயாருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் இருப்பதால், சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.