அமெரிக்காவில் 60 வயது நபர், தனது உணவில் உப்பை (சோடியம் குளோரைடு) குறைக்க ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்டிடம் ஆலோசனை கேட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அந்த நபர், உப்பின் தீமைகள் குறித்து வாசித்த பிறகு, தினசரி உணவில் இருந்து உப்பை நீக்க முடிவு செய்தார். ChatGPT-யின் பதில்களை அடிப்படையாகக் கொண்டு, உப்புக்குப் பதிலாக ‘சோடியம் ப்ரோமைடு’ (Sodium Bromide) என்ற வேதிப்பொருளை பயன்படுத்தத் தொடங்கினார்.

இது 1900-களின் தொடக்க காலத்தில் மருந்துகளில் பயன்படுத்தப்பட்டாலும், அதிக அளவில் உட்கொண்டால் கடுமையான விஷத்தன்மை ஏற்படும் என்பதால் தற்போது தடைசெய்யப்பட்ட ஒன்று.

அமெரிக்க கல்லூரி ஆஃப் பிசிஷியன்ஸ் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அந்த நபர் மூன்று மாதங்களாக ஆன்லைனில் வாங்கிய சோடியம் ப்ரோமைடையே உப்பிற்கு பதிலாக உணவில் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆரம்பத்தில் யாரோ தன்னை விஷம் கொடுத்து வருகின்றனர் என சந்தேகித்தார்.

முதலில் அவர் எந்த மருந்துகளையோ, சப்ப்ளிமென்ட்ஸ்களையோ எடுத்துக்கொள்வதில்லை என்று கூறினார். ஆனால், அனுமதி செய்யப்பட்ட பிறகு தான் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி, வீட்டில் தானாகவே தண்ணீரை டிஸ்டில் செய்து குடிப்பதை வெளிப்படுத்தினார்.

மருத்துவமனையில் இருக்கும் போதே, அவருக்கு கடுமையான நரம்பியல் மற்றும் மனநல பாதிப்புகள் உருவானது. அதில் மிகுந்த சந்தேகநோய், பித்தலாட்டங்கள், தோல் பிரச்சனைகள் உள்ளிட்டவை அடங்கும். “அவர் மிகுந்த தாகமாக இருந்தும், கொடுக்கப்பட்ட தண்ணீரைப் பற்றிய சந்தேகத்தால் குடிக்க மறுத்தார்” என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது.

பின்னர் அவருக்கு திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்கள் கொடுக்கப்பட்டு நிலைமை சீரானபின், மனநல பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள், இது ‘ப்ரோமிசம்’ (Bromism) எனப்படும் நச்சுத்தன்மை காரணமாக ஏற்பட்டது என்று உறுதி செய்துள்ளனர். ChatGPT-யின் பதிலில், குளோரைடை ப்ரோமைடால் மாற்றலாம் என்ற தகவலை (சுத்திகரிப்பு போன்ற வேறு பயன்பாட்டுக்காக) அவர் தவறாக உணவு பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் ப்ரோமைடு உப்புகள் தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்றவற்றுக்கு ஓவர்-தி-கௌண்டர் மருந்துகளில் பயன்படுத்தப்பட்டாலும், அதிக அளவு உட்கொண்டால் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தச் சம்பவம், உடல் நல ஆலோசனைகளில் AI சாட்பாட்கள் தவறான மற்றும் பாதகமான தகவல்களை வழங்கும் அபாயத்தை வெளிப்படுத்துகிறது. இதையே OpenAI-யின் பயன்பாட்டு விதிகளும் எச்சரிக்கின்றன.