உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சௌக் பகுதியில் அமைந்துள்ள ஆத்ம விஸ்வேஸ்வரர் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற ஆரத்தி நிகழ்வின் போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பூசாரி உட்பட 9 பேர் தீக்காயம் அடைந்தனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை மற்றும் ஜே.எஸ். நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஷ்ரவண மாதத்தின் கடைசி நாளை முன்னிட்டு கோவிலில் பருத்தியால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆரத்தி தரிசனத்திற்காக கூடியிருந்தனர். அப்போது, ஆரத்தி தட்டிலிருந்து விழுந்த எரியும் விளக்கு, பருத்தி அலங்காரத்திற்கு தீப்பிடிக்க காரணமானது. நொடிகளில் தீ பரவி, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் பூசாரி மற்றும் பக்தர்கள் பிரின்ஸ் பாண்டே, பைகுந்தநாத் மிஸ்ரா, சானித்யா மிஸ்ரா, சத்யம் பாண்டே, ஷிவானி மிஸ்ரா, தேவ் நாராயண் பாண்டே, கிருஷ்ணா உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

சம்பவ தகவல் அறிந்ததும், மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து அமைச்சர் தயாசங்கர் சிங் உட்பட பல உயரதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களின் சிகிச்சை நிலையைப் பரிசீலித்தனர். காயமடைந்த அனைவருக்கும் சிறந்த சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த தீ விபத்து, கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.