கர்நாடகாவின் பெங்களூருவில், 14 வயது 7ஆம் வகுப்பு மாணவன் காந்தர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு, காந்தர் தனது வீட்டில் கிட்டார் சரத்தை கிழித்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில், பிரபலமான ஜப்பானிய வலைத் தொடர் ‘டெத் நோட்’ அவரின் செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. காந்தர் அந்த தொடரை ஆவலுடன் பார்த்ததோடு, அதிலுள்ள ஒரு கதாபாத்திரத்தை தனது அறையில் வரைந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு, குடும்பத்துடன் உணவு உண்ட காந்தர், தனது செல்ல நாய் ராக்கியுடன் தூங்கச் சென்றார். மறுநாள் காலை, அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். காந்தரின் தந்தை இசைக் கலைஞர்; தாயார் சவிதா நாட்டுப்புறப் பாடகி ஆவார்.
சம்பவம் நடந்தபோது, சவிதா ஆஸ்திரேலியாவில் நிகழ்ச்சிக்காக இருந்தார். தற்கொலைக் குறிப்பில், “அம்மா, அப்பா, நீங்கள் என்னை 14 ஆண்டுகள் நன்றாக வளர்த்தீர்கள், நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் இன்று நான் செல்ல வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டிருந்தார்.
டெத் நோட் தொடரின் கதை, “டெத் நோட்” எனப்படும் மர்ம குறிப்பேட்டின் மூலம் குற்றவாளிகளை அழிக்கும் மாணவன் லைட் யாகமியைச் சுற்றி இந்த தொடர் கதை அமைகிறது. அந்த மர்ம குறிபேட்டில் பெயர் எழுதப்பட்டவர்கள் இறக்கும் சக்தி அந்த புத்தகத்துக்கு உள்ளது.
இந்த கதையை பின்பற்றியதால் காந்தரின் மனநிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தியிருக்கலாமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். பெற்றோரின் கூற்றுப்படி, அவர் பள்ளியிலோ வீட்டிலோ எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றும், தற்கொலைக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
