மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், 2 ஆண்டுகள் சைபர் மோசடியில் சிக்கி, கிட்டத்தட்ட ரூ.9 கோடி இழந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2025 வரை மொத்தம் 734 ஆன்லைன் பரிவர்த்தனைகளின் மூலம் இந்த மோசடி நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடியில் 4 பெண்கள் தொடர்புடையதாக கூறப்பட்டாலும், அவர்கள் அனைவரும் ஒரே நபராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது சைபர் குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஏப்ரல் 2023ல், முதியவர் பேஸ்புக்கில் ‘ஷார்வி’ என்ற பெயரில் உள்ள பெண்ணுக்கு நண்பர் கோரிக்கை அனுப்பினார். சில நாட்களுக்குப் பிறகு அதே பெயரில் வந்த நண்பர் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர், வாட்ஸ்அப்பில் உரையாட தொடங்கினார். தனது குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, ஷார்வி பணம் கேட்கத் தொடங்கினார். பின்னர் ‘கவிதா’ என்ற பெண், தன்னை ஷார்வியின் தோழி எனக் கூறி, ஆபாசச் செய்திகள் அனுப்பி, அதற்காகவும் பணம் பறித்தார்.

அதே ஆண்டின் டிசம்பரில், ‘டினாஸ்’ என்ற பெண், தன்னை ஷார்வியின் சகோதரி எனக் கூறி, ஷார்வி இறந்துவிட்டதாகவும், மருத்துவமனை கட்டணத்துக்காக பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். வாட்ஸ்அப் அரட்டைகளின் ஸ்கிரீன் ஷாட்களை காட்டி பணம் பெற்ற அவர், முதியவர் திருப்பித் தருமாறு கேட்டபோது, தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதற்கிடையில் ‘ஜாஸ்மின்’ என்ற பெண், தன்னை டினாஸின் தோழி எனக் கூறி உதவி கேட்டார். இதற்கும் முதியவர் பணம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தத்தில் ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2025 வரை, அந்த முதியவர் ரூ.8.7 கோடி அனுப்பியுள்ளார். சேமிப்புகள் தீர்ந்த நிலையில், மருமகளிடம் ரூ.2 லட்சம், மகனிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்று அனுப்பியுள்ளார். இறுதியில் மகன் காரணம் கேட்டபோது, உண்மை வெளிச்சம் பெற்றது. அதிர்ச்சியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஜூலை 22 அன்று சைபர் குற்றப்பிரிவில் புகார் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.