நகைச்சுவை நடிகையும், தொலைக்காட்சி பிரபலமான பாரதி சிங், சமீபத்தில் தன் யூடியூப் வீடியோவில் “லபுபு” எனப்படும் பொம்மையை எரிக்கும் காட்சி பெரும் வைரலாகி வருகிறது. தனது மகன் கோலுவுக்காக வாங்கிய அந்த பொம்மையை வாங்கியதிலிருந்து, அவர் அதிகமாகக் கத்துவது, குறும்புகள் செய்வது போன்ற பிரச்சனைகள் தொடங்கியதாக பாரதி தெரிவித்துள்ளார்.

இந்த பொம்மை தீய சக்தியைக் கொண்டதாகவும், அதை வைத்திருந்ததிலிருந்து வீட்டில் அமைதியின்றி திசைதிருப்பங்கள் ஏற்பட்டதாகவும் பலரும் கூறியதையடுத்து, ஜாஸ்மின் பாசின் உள்ளிட்ட நண்பர்கள் கூறிய கருத்தை நம்பி, அந்த பொம்மையை எரிக்க முடிவு செய்ததாக பாரதி தெரிவித்துள்ளார்.

வீடியோவில், கோலு அந்த பொம்மையை எரிக்க வேண்டாம் என கதறி “அவனை என் நண்பன்” எனக் கூறும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்தும் பாரதி, “அது ஷைத்தான்” என சொல்லி, மகனை நம்ப வைக்கிறார். ஹர்ஷ் இந்த செயலை எதிர்த்து, மூட நம்பிக்கையோடு இப்படி நடக்கக் கூடாது என கூறினாலும், பாரதி இறுதியில் அந்த பொம்மையை தீ வைத்து எரிக்கிறார்.

“இதை வைத்திருந்ததிலிருந்து எங்கள் மகன் மிகுந்த கோபக்காரராக மாறிவிட்டார். நான் பலரிடம் கேட்டேன், எல்லோரும் இது ஒரு ஷைத்தான் போல இருக்கிறது என சொன்னார்கள்” என பாரதி கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, லபுபு பொம்மையின் இயல்பு குறித்து புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.