தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா, ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த வருட ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ள நிலையில், விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 7ம் தேதி) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ளார். மக்கள் திரளாக பங்கேற்கும் இந்த ஆன்மிக நிகழ்வை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு தேர்வுகள் ஏதேனும் நடைபெறவிருந்தால், அதற்காக தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோருக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 23ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாடாக மாற்றி அலுவலகங்கள் இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள் இந்த அறிவிப்பை வரவேற்று, திருவிழாவில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர்.
