ஆஸ்திரேலியாவின் உலகளாவிய சுற்றுலா வளர்ச்சிக்காக திட்டமிடப்பட்ட ” (Come and Say G’day) என்ற பிரம்மாண்ட பிரச்சாரத்தில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் முக்கிய முகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
27 வயதான சாரா, $130 மில்லியன் மதிப்புள்ள இந்த திட்டத்தின் முக்கியப் பங்காளியாக இருப்பார். சீனாவில் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் தொடங்கும் இந்த பிரச்சாரம், ஆண்டின் இறுதிக்குள் உலகின் பல முக்கிய சந்தைகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள சாரா டெண்டுல்கர், ஆஸ்திரேலிய கலாசாரம், இயற்கை, மற்றும் சாகச சுற்றுலா அனுபவங்களை இந்திய இளைஞர்களிடையே பரப்பும் முயற்சியாக பங்கு வகிக்கிறார். இவருடன், பிரபல சமையல்காரர் நிஜெல்லா லாசன், வனவிலங்கு ஆர்வலர் ராபர்ட் இர்வின், சீன நடிகர் யோஷ் யூ, மற்றும் ஜப்பானிய நகைச்சுவை நடிகர் அபரேரு-குன் ஆகியோர் இணைந்து செயற்பட உள்ளனர்.

ஆஸ்திரேலிய சுற்றுலா துறை நிர்வாக இயக்குநர் பிலிப் ஹாரிசன் கூறுகையில், “ஒவ்வொரு சந்தைக்கும் ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட அழைப்புகளை உருவாக்க இந்த சர்வதேச பிரபலங்கள் உள்ளூர் திறமைகளுடன் இணைந்து செயல்படவுள்ளனர்.
இது சுற்றுலா வளர்ச்சிக்கான முக்கியமான பங்களிப்பாக அமையும்” என்றார். மேலும், இரண்டாம் கட்டத்தில் மட்டும் $255 மில்லியன் வரை முதலீடு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
