மும்பை பிவாண்டி பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ லைன் 5 (தானே – பிவாண்டி – கல்யாண்) பணிகளில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடால் ஓர் ஆட்டோ ரிக்ஷாவிற்குள் இரும்பு டை கம்பி விழுந்து பயணியொருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவம் பாதுகாப்பு முறைகளில் மோசமான அலட்சியத்தை வெளிப்படுத்தியது எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (MMRDA) இந்த பணிக்குப் பொறுப்பான சிவில் ஒப்பந்ததாரர் ஆஃப்கான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

காயமடைந்த பயணியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கின்ற நிலையில், அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மெட்ரோ பணிகளை கண்காணிக்கும் பொது ஆலோசகர் சிஸ்ட்ரா-சிஇஜி-சிஸ்ட்ரா இந்தியா நிறுவனத்திற்கும் மேற்பார்வை குறைபாடுகளுக்காக ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தவறுகளின் பின்னணியை விசாரிக்க மெட்ரோ லைன் 2B-இன் தலைமை பாதுகாப்பு மேலாளரின் தலைமையில் ஒரு சுயாதீன விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து MMRDA வெளியிட்ட அறிக்கையில், “பொது மக்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மை. இந்த தவறுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசாரணையின் முடிவுகள் அடிப்படையில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.