ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இந்திய மக்களிடம் நம்பிக்கையாக பயன்பட்ட பதிவு தபால் சேவை, வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதால், மக்கள் மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் போன்ற டிஜிட்டல் முறைகளையே அதிகம் நாடுகின்றனர். இதனால் பதிவு தபாலின் மீதான தேவை குறைந்து வந்ததுடன், தற்போது அதை தொடர்வதில் பொருளாதார நோக்கிலும் பயனில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஸ்பீடு போஸ்ட் சேவையின் வெற்றியும் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பதிவு தபாலை விட வேகமாகவும், நேரத்துக்குள் நம்பகமாகவும் கடிதங்களை சேர்ப்பிக்கக்கூடிய ஸ்பீடு போஸ்ட் சேவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எனவே, அஞ்சல் துறை தனது சேவைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், பதிவு தபாலை நிறுத்தி, ஸ்பீடு போஸ்ட் சேவையை மேம்படுத்துவதாக முடிவு செய்துள்ளது. இது மக்களின் தேவைக்கேற்ப விரைவான, நம்பகமான சேவைகளை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.