நவி மும்பையில் உள்ள பாம் பீச் சாலையில் திங்கள்கிழமை இரவு, மூன்று கல்லூரி மாணவர்கள் வேகமாக ஓடும் காரில் இருந்து ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஹரி சுபாஷ் கோல்பே (19), காவ்யா ஜோஷி (20), வினய் ராவல் (19) ஆகிய மாணவர்களை சன்பாடா காவல்துறையினர் அடையாளம் கண்டனர். வீடியோவில், ஒருவர் காரின் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருப்பதும், மற்றொருவர் சன்ரூஃப் வழியாக வெளியே நின்றிருப்பதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
#WATCH | #NaviMumbai: Three Students Booked For Dangerous Car Stunts On Palm Beach Road; Video Goes Viral
Reported by: @Raina_Assainar #Maharashtra #maharashtranews pic.twitter.com/rFfnMrceFh
— Free Press Journal (@fpjindia) August 5, 2025
இந்த சம்பவத்தில் ஹரி தனது தந்தையின் காரை எடுத்துச் சென்றதாகவும், ஜோஷி வாகனத்தை ஓட்டியதாகவும், மூவரும் சர்சோலில் இருந்து வாஷி நோக்கி பயணித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், போக்குவரத்து போலீசார் விரைந்து காரின் பதிவு எண் மூலம் உரிமையாளரை கண்டறிந்து, ஸ்டண்டில் ஈடுபட்டவர்கள் அவரது மகன் மற்றும் நண்பர்கள் என உறுதி செய்தனர்.
இதையடுத்து, மூவரும் மீது கவனக்குறைவு, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நவி மும்பையில் சமீப காலங்களில் வாலிபர்கள் ஸ்டண்ட் செய்வது வழக்கமானதாக காணப்படுவதாகவும், இதுபோன்ற சட்டவிரோத செயலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
