உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பெரும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை மற்றும் யமுனை நதிகள் கரைபுரண்டு ஓடியதால், வீடுகள், கோயில்கள், தெருக்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், பிரயாக்ராஜ் நகரில் தந்தை, தாயார் இருவரும் தங்களின் சிறிய குழந்தையை இரண்டு கைகளாலும் தூக்கி இடுப்பு அளவு தண்ணீர் வழியாக செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சுற்றிலும் கழிவுநீர் குவிந்திருந்தாலும், குழந்தையை பாதுகாப்பாக எடுத்துசெல்லும் அந்த பெற்றோர்களின் போராட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

பிரயாக்ராஜின் சோட்டா பகதா பகுதியில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. மழைநீரால் வீடுகள், வாகனங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை முழுமையாக மூழ்கியுள்ளன. மொத்தம் மாநிலம் முழுவதும் 402 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 84,000-க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். 343 வீடுகள் சேதமடைந்துள்ளன, 4,000 ஹெக்டேருக்கும் மேற்பட்ட பயிர்கள் அழிந்துள்ளன.

மாநில அரசு தற்போது தீவிர நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 18 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

493 படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 757 மருத்துவக் குழுக்கள் மக்கள் சுகாதார சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் 327 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் அனைத்து நிவாரண உதவிகளும் தரப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.