பெங்களூருவின் புறநகர் பகுதியில் உள்ள நெலமங்களா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு இளம் செவிலியர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்தவர், தும்குரு மாவட்டம் கியாரஹள்ளியில் வசித்து வந்த 22 வயதான பாவனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மைசூரில் நர்சிங் படித்த பாவனா, தும்குருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்ஸாக பணிபுரிந்து வந்தார்.
பாவனாவுடன் நெருங்கிய தோழியாக இருந்த ஒருவரின் தந்தை நவீன் என்பவரே, இந்த தற்கொலையில் முக்கியக் காரணமாக இருந்து இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நவீன், தனது மகளின் வங்கி கணக்கில் பாவனாவின் தந்தை பணம் அனுப்பியதன் மூலம் அவரது தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு பாவனாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஒரு பயணத்தின் போது, தர்மஸ்தலாவில் அவர் பாவனாவின் தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்து திருமணம் செய்ய அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதை மறுத்தால் புகைப்படங்களை வைரலாக்குவேன் என மிரட்டியதுடன், வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்றும் பாவனாவை கட்டாயப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இத்தகைய துன்புறுத்தலால் மனமுடைந்த பாவனா, கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றிருந்தார். அந்த நேரத்தில் அவரது தந்தை சேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் நவீனிடம் எச்சரிக்கை விடுத்து, பாவனாவுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியிருந்தனர். பாவனா பிறகு நலமடைந்த நிலையில் தனது அத்தையின் வீட்டில் தங்க இருந்தார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை, நெலமங்கலாவில் உள்ள தனது அத்தையின் வீட்டில் தூக்குப்போட்டு பாவனா உயிரை மாய்த்துக்கொண்டார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் நெலமங்கலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இளம் பெண்ணின் தற்கொலை சம்பவம் பெற்றோர் மற்றும் நெருங்கியவர்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
