அசாம் மாநிலத்தை சேர்ந்த நந்தினி காஷ்யப் என்பவர் ருத்ரா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடித்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பையும், வசூல் ரீதியாக பெரும் வெற்றிகளையும் பெற்றது. இந்த நிலையில் இவர் கவுகாத்தி பகுதியில் ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 25-ஆம் தேதி காலை 3 மணி அளவில் கவுகாத்தியில் பகுதி நேரமாக வேலை பார்த்த பாலிடெக்னிக் மாணவன் சாமியுல் ஹக்(21) என்பவர் தகிங்காவ்ன் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நடிகை நந்தினி காரை வேகமாக ஓட்டி வந்து மாணவன் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டதை அறிந்தும் விபத்தை ஏற்படுத்திய நடிகை உதவி செய்யாமல் அங்கிருந்து காரை எடுத்து சென்றதாக அப்பகுதி மக்கள் கூறினர். பின்பு அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் பொதுமக்களின் தகவலின் பேரில், நந்தினி காஷ்யப்-ஐ கைது செய்த போலீசார் அவரது காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கவுகாத்தி போலீசார் கூறுகையில், “நாங்கள் நடிகை நந்தினி காஷ்யப் -ஐ இன்று கைது செய்தோம். அவர் மீது தொடரப்பட்ட வழக்கு வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் நாங்கள் அவரிடம் விசாரணை மட்டுமே மேற்கொண்டோம்.
நேற்று மாலை பாதிக்கப்பட்ட மாணவர் உயிரிழந்த நிலையில் நந்தினி காஷ்யப் மீது கொலைக்கு சமமான குற்றவியல் பிரிவில் வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே அவரால் இதன் பின்பு ஜாமினில் வெளிவர முடியாது. இந்த வழக்கில் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.
