பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் பிழை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட கருத்து அதிமுக வட்டாரத்திலும், ஜெயலலிதா ரசிகர்களிடமும் கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது.

இந்தக் கருத்துக்கு பதிலளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், “அது பிழை அல்ல, வரலாற்றுப் புரட்சி” எனக் கண்டித்துள்ளார். தனது கடும் நோக்கத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், ஜெயலலிதா மட்டுமல்லாது, அதிமுகவின் அடையாளமாக இருந்த ஒவ்வொரு சாதனையையும் நினைவுபடுத்தியுள்ளார்.

OPS வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆர். தொடங்கிய மக்களின் இயக்கத்தை, அவருக்குப் பின் நான்கு முறை ஆட்சிக்கு அழைத்தவர் ஜெயலலிதா. மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என அதிமுகவை உயர்த்திய பெருமை அவருக்கு உண்டு. 234 தொகுதிகளிலும் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ந்தும் ஆட்சி அமைத்த பெருமையும் அவருடையது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 1999-ல் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதால்தான், 2001-ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்குவந்தது என்ற வரலாற்றையும் OPS எடுத்துக்காட்டியுள்ளார்.

OPS தொடர்ந்தும், “ஜெயலலிதா செய்த முடிவு வரலாற்றுப் பிழை இல்லை, அது வரலாற்றுப் புரட்சி. அந்த முடிவே தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சியமைப்பதற்கான பாதையை உருவாக்கியது. ஆனால், அவரால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வளர்த்த கடம்பூர் ராஜூ, இன்று அந்த அதிபதியின் முடிவை விமர்சிப்பது வரலாற்றுப் பிழை” என கடும் சாடல் விட்டு இருக்கிறார்.

“மோடியா, இந்த லேடியா” என்று சவால் விடுத்து, 37 தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு வழிவகுத்த ஜெயலலிதாவை குறை சொல்வது மிகுந்த நன்றிக்கேடாகும் எனவும் OPS தெரிவித்துள்ளார்.

OPS தனது அறிக்கையைத் தொடர்ந்தும், “ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது என்பது மிகப்பெரிய துரோகம். ஜெயலலிதாவை குறை கூறுவது என்பது ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்வதைப் போன்றது. கடம்பூர் ராஜூ அவர்களது அறியாமையை வெளிப்படுத்தும் இந்தச் செயலை, பொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள். அவர் உடனடியாக ஜெயலலிதா குறித்து வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில், இதற்கான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் ” என, கடும் எச்சரிக்கையுடன் முடித்துள்ளார்.