அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான எமிலி எங்கர் என்ற பெண், தன்னுடைய தாய்மையின் மூலம் ஒரு தனித்துவமான வருமான வாய்ப்பை உருவாக்கி வருகிறார். ஐந்து குழந்தைகளுக்கு தாயான இவர், தாய்ப்பாலை வழங்கிய பிறகு கூடுதலாக பம்ப் செய்து கிடைக்கும் பாலை பைகளில் அடைத்து, விற்பனை செய்வதற்காக ஃப்ரீசரில் சேமித்து வைக்கிறார். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமார் 1,000 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.86,959 வரை சம்பாதித்து வருகிறார்.
அமெரிக்காவில் சமீப காலங்களில் தாய்ப்பாலை விற்பனை செய்வது வளர்ந்து வரும் ஒரு புது தொழிலாக உருவெடுத்து வருகிறது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணியாக, “Make America Healthy Again” (MAHA) என்ற இயக்கத்தின் எழுச்சி குறிப்பிடப்படுகிறது. இந்த இயக்கத்தின் தலைவர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், குழந்தை பால் மருந்துகளை விட இயற்கையான தாய்ப்பாலே சிறந்தது என்று வலியுறுத்தி வந்துள்ளார். இந்த இயக்கத்தின் பின்புலத்தில், பல தாய்மார்கள் தங்களால் உற்பத்தியாகும் கூடுதல் பாலை பிற குழந்தைகளுக்காக வழங்க முன்வந்துள்ளனர்.
எமிலி எங்கர் தினமும் அதிகளவில் பாலை பம்ப் செய்யக்கூடியவராக உள்ளார். சில நாட்களில் 80 அவுன்ஸுக்கு மேல் தாய்ப்பால் சப்ளை செய்யும் திறனைக் கொண்ட இவர், இதுவரை ஆயிரக்கணக்கான அவுன்ஸ்கள் பாலை வாடிக்கையாளர்களுக்காக விற்றுள்ளார். சில பெற்றோர், உடல்நிலை பிரச்சனைகள், மருந்துகளின் தாக்கம் மற்றும் குறுகிய மகப்பேறு விடுப்புகள் காரணமாக தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில், எமிலி போன்ற தாய்மார்கள் அவர்களுக்கு ஆதரவாக திகழ்கின்றனர்.
இந்த முயற்சி, தாய்மையையும் தொழிலையும் இணைக்கும் ஒரு புதிய பாதையாக அமைகின்றது. தாய்ப்பாலின் மருத்துவ முக்கியத்துவம் மற்றும் இயற்கை பாதுகாப்பு காரணமாக, பல பெற்றோர்கள் இந்த சேவையை விரும்பி நாடி வருகின்றனர். எமிலி எங்கர் போன்றவர்கள் மூலம், தற்போது அமெரிக்காவில் தாய்ப்பாலை விற்கும் தாய்மார்கள் ஒரு புதிய சமூக சேவையாளர்களாகக் கருதப்படுகிறார்கள். இது தனிநபர் முயற்சி மூலம் சமூக தேவையை பூர்த்தி செய்யும் அரிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
