உத்தரப் பிரதேசம் சந்தவுலி மாவட்டம் அலிநகர் தப்ரி கிராமத்தில், மத நல்லிணக்கத்துக்கான முக்கிய எடுத்துக்காட்டாக, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சக்லைன் ஹைதர் என்பவர் தனது உறவினர் அக்தர் அன்சாரிக்கு தானமாக அளித்த 1,364 சதுர அடி நிலத்தில் பழமையான சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் பொழுது இந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், மக்கள் திரளாக வந்து சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தில் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் தற்காலிகமாக அருகிலுள்ள கோயில் ஒன்றில் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கிராம மக்கள் அதே இடத்தில் ஒரு பெரிய சிவன் கோயிலை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை சக்லைன் ஹைதர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக ஏற்று, அந்த நிலத்தை கோயில் கட்டுவதற்காக நன்கொடையாக வழங்க சம்மதித்தனர்.

இதுபற்றி சக்லைன் ஹைதர் கூறுகையில், “நாங்கள் பல ஆண்டுகளாக அனைத்து சமூகத்தினருடனும் அன்போடு வாழ்ந்து வருகிறோம். மத வேற்றுமையின்றி பண்டிகைகளை கொண்டாடி வந்தோம். சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த நிலத்தை சிவன் கோயிலுக்காக தானமாக வழங்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கள் நாளை முன்னிட்டு, அத்தனையோரும் சிவலிங்கத்தை மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். ஜலாபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து, அருகிலுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

நிலைமையை கட்டுப்படுத்த, சந்தவுலி மாவட்ட நிர்வாகம் போலீசாரை அதிக அளவில் பணியமர்த்தியுள்ளது. இஸ்லாமியர் ஒருவர் தன்னுடைய நிலத்தை சிவன் கோயிலுக்காக தானமாக வழங்கிய இந்த செயல், மத நல்லிணக்கத்தின் அழகிய சின்னமாக தமிழகத்தில்தான் அல்லாது, இந்திய அளவிலும் பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.