கோயம்புத்தூரில் தேமுதிக கட்சியின் இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் பிரச்சார பயணத்தை தொடங்க இருக்கிறோம். எங்களுடைய கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சென்று மக்களை சந்தித்து பேச இருக்கிறார்.

வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி எங்களுடைய பிரச்சார பயணம் தொடங்க இருக்கிறது. கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் எங்களுடைய சுற்றுப்பயணம் அமையும். கடலூரில் ஜனவரி ஒன்பதாம் தேதி தேமுதிக மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டின் போது நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை தெரிவிப்போம் என்றார்.

மேலும் ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிப்பதாகவும் அடுத்த மாநிலங்களவைத் தேர்தலில் கண்டிப்பாக தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று உறுதி கொடுத்திருந்தார். அதே நேரத்தில் திமுக அல்லது விஜய்யுடன் தேமுதிக கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என விஜய பிரபாகரன் அறிவித்துள்ளது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.