தமிழகத்தின் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளை நோக்கி நகரும் எனவும், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானதாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா கடலோர பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடலில் நிலவும் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் காரணமாக, தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜூலை 30ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதிகள் அதிகபட்ச மழையை எதிர்பார்க்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
