முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை நடைப்பயிற்சியின்போது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அவரை அருகிலிருந்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரை அணிவகுக்கும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, முதல்வருக்கு அங்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஸ்டாலினுக்கு சிறிய உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள், இரு நாட்கள் ஓய்வெடுக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
