ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 19 வயது மாணவர், தனியார் கல்லூரியில் பி.டெக் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் 38 வயது பெண் ஒருவர் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அந்த பெண், தனிமையால் வாட்டப்பட்ட நிலையில் மாணவனுடன் பழகத் தொடங்கினார். இந்த நட்பு, நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த மே மாதம், அந்த மாணவர் தனது பெற்றோரிடம் “படிப்பு தொடர்பாக பெங்களூரு செல்கிறேன்” எனக் கூறி, பெண் ஊழியருடன் பயணம் செய்துள்ளார். பல நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் சந்தேகமடைந்தனர். விசாரணையில், கல்லூரி ஊழியர் மாணவனை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மாணவனின் பெற்றோர் கடந்த 15ம் தேதி சித்தூர் 2வது டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் தொடர்ந்த விசாரணையில், பெங்களூருவில் உள்ள ஒரு லாட்ஜில் அந்த பெண் ஊழியர் மாணவனுடன் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியிருப்பது தெரியவந்தது. இருவரும் ஒரே அறையில் இருந்ததையும் போலீசார் உறுதிப்படுத்தினர். உடனே போலீசார் அந்த இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு சித்தூருக்கு அழைத்துவரப்பட்டனர்.
பின்னர், மாணவனும், பெண் ஊழியரும் தனித்தனியாகக் கலந்துரையாடப்பட்டனர். போலீசார் சில முக்கியமான அறிவுரைகள் வழங்கிய பிறகு, இருவரையும் தனித்தனியாக வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் சித்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரால் இளம் மாணவர் பாதிக்கப்படுவதாக சமூகத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
