2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இரட்டைக்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்ட தந்தை, மகனை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்துக்குப் பின்னால் உள்ள சதியை கண்டுபிடிக்க, சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மீதமுள்ள அனைத்து குற்றவாளிகளும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில், முக்கிய திருப்பமாக இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், “அரசு தரப்பு சாட்சியாக இருக்க விரும்புகிறேன்” என்ற மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். “மனசாட்சி கொள்கைக்கு உட்பட்டு உண்மையை சொல்ல விரும்புகிறேன். மற்ற போலீசார் செய்த கொடுமைகளை நீதிமன்றத்தில் வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன்” என தனது மனுவில் தெரிவித்துள்ளார். இது வழக்கின் போக்கை முழுமையாக மாற்றக்கூடிய முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.
இந்த மனுவைப் பெற்ற நீதிபதி வேல்முருகன், இது தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சிபிஐ இதுவரை 105 சாட்சிகளில் 52 பேரை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், முதற்கட்டமாக 2027 பக்கங்களும், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்களும் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஸ்ரீதரின் மனு, மீதமுள்ள போலீசாருக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
