புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, குரங்குகள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், அப்பகுதியினர் கடும் பதற்றத்தில் உள்ளனர். கறம்பக்குடி அருகே உள்ள தீதான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் ஆறு மாத குழந்தை அனன்யா, வீட்டின் போர்டிகோவில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று அச்சிறு குழந்தையை கடித்து விட்டது.
குரங்கு கடிததில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அருகிலுள்ளவர்கள் சத்தம் போட்டதையடுத்து, குரங்கு குழந்தையை அங்கு விட்டுவிட்டு தப்பியது. உடனே குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதேபோல், சுக்கிரன்னவிடுதி பகுதியில் மூன்று மாத ஆண் குழந்தை அதியனும், வீட்டு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது குரங்கு கடித்ததில், இடது தொடையில் காயம் ஏற்பட்டு, அந்தக் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
இந்த வகை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதால், அப்பகுதியில் குரங்குகள் மிகுந்த தொல்லை ஏற்படுத்தி வருவதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடிக்கப்பட்டு காயம் அடைகின்றனர் என்றும், குரங்குகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தி வருகின்றனர்.
