டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் ராணுவத்துக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து தொடர்பான தகவலின்படி, டாக்கா நகரில் அமைந்துள்ள மைல் ஸ்டோன் கல்வி நிறுவனத்தின் உத்தரா கேம்பஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வங்கதேச விமானப்படையின் எஃப்-7 (F-7) வகை பயிற்சி விமானம் இன்று காலை சற்றுநேரம் பயணித்த பிறகு எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து, கல்வி வளாகத்துக்குள் விழுந்து நொறுங்கியது. விமானம் தரையில் விழுந்ததும் அதில் தீ விபத்து ஏற்பட்டு இடத்தை முழுமையாக புகை மூட்டம் சூழ்ந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதற்றத்தில் சிதறி ஓடினர்.
இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், பல மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு ராணுவம், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது பயணிகள் விமானம் அல்ல, ராணுவ பயிற்சி விமானம் என்பதால் அதில் அதிகபட்சம் 2 அல்லது 3 பேர் மட்டுமே இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால், பயணித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்து நடந்த காரணம் குறித்து தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
மேலும், சம்பவம் நடந்தது பள்ளி வளாகத்தின் பின்னணி பகுதியில் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமான விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. காட்சிகளை பார்த்தவுடனே மிகப் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. பள்ளி வளாகம் முழுவதும் ஒரு போர்க்களத்தை ஒத்த சூழ்நிலையாக மாறியிருப்பதைக் காண முடிகின்றது. இது தொடர்பாக மேலும் விரிவான தகவல்களை ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.