க்ஷஅமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வசிக்கும் இந்திய வம்சாவளியையுடைய மருத்துவர் ரிதேஷ் கல்ரா (51 வயது) மீது நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, மருந்து வழங்கும் பொருட்டு பாலியல் உந்துதல் செய்ததாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், நியூ ஜெர்சி மாநிலத்தின் Medicaid அரசு மருத்துவ திட்டத்தையும் மோசடி செய்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகளின் பின்னணியில், அவரது மருத்துவ உரிமம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அரசின் வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கல்ராவின் முன்னாள் ஊழியர்கள் சிலர், பல பெண் நோயாளிகள் அவரிடம் முறைகேடான மருத்துவ நடத்தை குறித்து புகார் கூறியிருந்தனர். ஒரு நோயாளியை, மருத்துவ ஆலோசனையின் போது பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். மேலும், சிறையில் இருந்த நபருக்கு கூட அவர் நேரில் சந்திக்காமலேயே போதை மருந்துகள் பரிந்துரை செய்துள்ளார். கூடவே, பல்வேறு ‘ghost appointments’ என அழைக்கப்படும் போலியான சந்திப்புகளுக்காக Medicaid திட்டத்தில் பணம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக, அமெரிக்க அதிபர் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அலினா ஹப்பா, “மருத்துவப் பணியாளர்கள் மக்கள் நம்பிக்கையை ஏந்துபவர்கள். ஆனால் கல்ரா தனது பதவியை தனி நலனுக்கும், பாலியல் ஆசைக்கும் பயன்படுத்தியுள்ளார்,” எனக் கண்டனம் தெரிவித்தார். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு போதை மருந்து விநியோகத்திற்கும் 20 ஆண்டுகள் வரை சிறைதண்டனை மற்றும் மோசடி குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், அதிகபட்சமாக ஒரு மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
