தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த பிரேம்குமார் என்பவரது மகன் தருண் குமார்(21). இவர் கல்லூரியில் கட்டிட கலையியல் பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே பெயிண்ட், மினியேச்சர் போன்ற ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் அதிகம். தற்போது சூரிய ஒளியின் மூலம் ஓவியம் வரைவது வைரலாகி வரும் நிலையில் தருண் குமார் அதையும் முயற்சி செய்து அசத்தி வருகிறார்.
இவர் அரசியல் தலைவர்களின் ஓவியம், ராஜராஜ சோழன் போன்ற மன்னர்கள் ஓவியம், பிரபலங்களின் ஓவியம் போன்ற பல்வேறு விதமான ஓவியங்களை சூரிய ஒளி வெளிச்சத்தில் லென்ஸ் பயன்படுத்தி வரைந்து வருகிறார். இதுகுறித்து தருண் குமார் கூறியதாவது, இந்த ஓவியங்களில் மழை, வெயில் படாமல் பாதுகாத்தால் சுமார் 400 ஆண்டுகள் வரை அழியாமல் அப்படியே இருக்கும்.
இந்த ஓவியம் வரைவது எப்படி என சூரிய குமாரிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் கூறியதாவது சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி அதனை லென்ஸ் மூலம் ஒரு மிட் பாயிண்ட் குறித்து வரைய வேண்டும். ஒரு ஓவியத்தை வரைவதற்கு இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை ஆகும். அதுவும் ஓவியத்தை பொறுத்தே எத்தனை நாட்கள் ஆகும் என்பதை சொல்ல முடியும்.
இதுவரை நான் வரைந்த ஓவியங்களிலே ராஜராஜ சோழனின் ஓவியம் எனக்கு சவாலான ஒன்றாக இருந்தது. நான் படிப்பது கட்டிடகலை. ஆனால் இந்த ஓவியத்தின் மேல் எனக்கு உள்ள ஆர்வத்தினால் தற்போது இந்த ஓவியம் வரைந்து வருகிறேன். இந்த ஓவியத்தை கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு நான் கற்றும் கொடுக்கிறேன். ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஏற்ற மாதிரியான ஓவியங்களை ஆர்டர் செய்கின்றனர்.
ஒரு நாள் முழுவதும் தூங்காமல் விழித்திருந்து ஓவியம் வரைந்தால் இரவு தூக்கம் வராது; ஆனால் கண்களுக்கு எரிச்சல் ஏற்படும். எனவே பாதுகாப்பான கண்ணாடியை அணிந்து வரைய வேண்டும். அதிலும் சில சமயம் பிரச்சனைகள் ஏற்படும். இருப்பினும் இந்த ஓவியம் வரைவதற்கு மிகவும் சவாலான ஒன்றாக உள்ளதால் எனக்கு இதில் அதிக ஆர்வம் இருப்பதாக தருண் குமார் கூறியுள்ளார்.
