இஸ்ரேல்- காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயம் குண்டு வீச்சால் அழிக்கப்பட்டுள்ளது.

அந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்தத் தாக்குதலில் போப் ஆண்டவருக்கு பாலஸ்தீனம் குறித்த தகவல்களை வழங்கி வந்த பிஹார் ஜெனரல் பாதிரியார் கேப்ரியல் ரோமானெல்லி குண்டு வீச்சில் தனது காலில் பயங்கர காயம் அடைந்துள்ளார்.

காசாவில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்கள் பாலஸ்தீன முஸ்லிம்களுடன் நெருக்கமான உறவை வைத்துள்ளனர். தற்போது இச்சம்பவத்தை கண்டித்து காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யக்கோரி போப் லியோ அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 29 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன் மூலம் காசாவில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 58,500 ஐ கடந்துள்ளது. மேலும் 1,39,600 பேருக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.