திராவிடர் கழகம் இயக்கத்தின் துணைப் பொது செயலாளர் மதிவதனி குறித்து யூடியூப் பேட்டியில் ஆபாசமாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளர் சாரங்கபாணி மீது கோவை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாரங்கபாணி, தமிழ் தேசியக் கொள்கையுடன் சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருபவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் மதிவதனி குறித்து மிகவும் அவமதிக்கும் வகையிலான கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.

இந்த பேட்டி குறித்து எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் பிரபாகரன், கோவை மாநகர ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீடியோவை ஆய்வு செய்த காவல்துறை, சாரங்கபாணி மீது அவதூறு, உள்ளிட்ட  ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

தொடர்ந்து அவரை கைது செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்ட காவல்துறை, சாரங்கபாணி ஒசூரில் பதுங்கியிருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து கோவையில் இருந்து ஒரு தனிப்படையினர் ஒசூருக்குச் சென்று அவரை கைது செய்தனர். தற்போது அவர் கோவைக்கு அழைத்துவரப்பட்டு, விரிவான விசாரணை நடைபெற உள்ளது.

2026 சட்டசபை தேர்தலுக்கான அரசியல் சூழ்நிலை விறுவிறுப்பாக மாறி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அரசியல் கட்சி சார்ந்த சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரம், அரசியல் அணிகள் இடையே மேலும் கடும் விவாதங்களை கிளப்பும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. சாரங்கபாணியின் கைது, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.