தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.அனில். இவர் காங்கிரஸ் பட்டியிலின பிரிவு செயலாளராக இருந்தார். இவர் கடந்த திங்கட்கிழமை இரவு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.
அந்த மர்ம நபர்கள் திடீரென அவரது காரை வழிமறித்து துப்பாக்கியால் நான்கு முறை சுட்டனர். இதில் அனில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் அனில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் பண தகராறு காரணமான பிரச்சனையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு ஒரு நாள் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினர் கே. சந்து நாயக் (47) என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் கொலை குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடிவரும் நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்களின் அடுத்தடுத்த கொலைகளால் தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
