மடகாஸ்கர் நாட்டில், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது. தலைநகர் அண்டனானரிவோவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இமெரிண்ட்சியாடோசிகா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளிக்கு கடுமையான  ஆயுள் தண்டனை, அத்துடன்  அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்யும் தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். இது, 2024-ஆம் ஆண்டு மடகாஸ்கர் அரசு கொண்டு வந்த சிறுமிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதல் நடவடிக்கையாகும். 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றங்களுக்கு இந்த புதிய சட்டத்தின் மூலம் இத்தகைய கடுமையான தண்டனைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த தீர்ப்பின் மூலம், குழந்தைகளை குறிவைத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிராக தடுக்கும் உத்தியாகவும், எச்சரிக்கையாகவும் இது செயல்படும் என மடகாஸ்கர் நீதித்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு, “இதேபோன்ற அக்கிரம எண்ணத்துடன் செயல்பட முயலும் எந்த ஒருவருக்கும் எச்சரிக்கையாகும்” என்றும்,
“நீதியின் வலிமையான முகமாக இது விளங்கும்” என்றும் அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

உலக நாடுகளில் பலரும் இத்தகைய கடுமையான தண்டனைகளை ஏற்க துவங்கியுள்ள நிலையில், மனித உரிமை அமைப்புகள் இதற்கும் எதிராக கருத்து தெரிவித்துள்ளன.