உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் பகுதியில் குருகுல பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த சிறுவன் அனுராக் (13). அவர் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது விடுதிக்கு புதிதாக ராம் லக்கன் (18) என்ற மாணவர் சேர்ந்துள்ளார். அவர் அப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனை அடுத்து விடுதியில் இரவு நேரத்தில் தூங்குவதற்காக இடம் பிடிப்பது குறித்து இரு மாணவர்களுக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் ராம், அனுராக்கை கடுமையான முறையில் தாக்கியுள்ளார். கையைப் பிடித்து குத்தியும், உதைத்தும் உள்ளார். ஆத்திரத்தில் வேகமாக அடித்ததால் அனுராக்கின் காது, மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதனைக் கண்ட சிறுவர்கள் அதிர்ச்சியில் விடுதி ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
உடனே சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால் சிறுவன் பலத்த காயமடைந்ததால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் இது குறித்து விடுதியில் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையில் அனுராக்கை கடுமையாக தாக்கியதாக ராம் ஒத்துக்கொண்டு உள்ளார். இதனை அடுத்து ராமை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
