கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில், திருமணமான மூன்று மாதத்துக்குள் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், ஜூலை 12 ஆம் தேதி, அந்த மனைவி தனது கணவரை ‘செல்ஃபி எடுக்கலாம்’ என்ற பெயரில், ராய்ச்சூர் அருகே உள்ள கட்லூர் கிராமத்தின் வழியாக ஓடும் கிருஷ்ணா ஆற்றுக்கு அழைத்துச் சென்றார்.
இருவரும் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை இணைக்கும் மேம்பாலத்தின் நடுப்பகுதியில் நின்ற போது, மனைவி திடீரென கணவரை ஆற்றுக்குள் தள்ளி விடுகிறார். கணவன் திடீரென கீழே விழ, அதைப் பார்த்த சுற்றியுள்ளவர்கள் அதிர்ச்சியில் தங்கள் வாகனங்களை நிறுத்தி ஓடி வந்து பார்த்தனர்.
அந்த இளைஞர், நீச்சலடித்து ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள பாறையில் ஏறி நின்றுள்ளார். பின்னர், பொதுமக்கள் கயிறு உதவியுடன் அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மீட்ட பிறகு, “நீங்களே ஆற்றுக்குள் குதித்தீர்களா?” எனக் கேட்டபோது, அவர் “இல்லை… என் மனைவிதான் தள்ளிவிட்டாள்” என பதிலளித்துள்ளார். இதனால் அந்த இடத்தில் இருந்தவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
