தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு ‘ப’ வடிவ அமைப்பில் அமரும் வகையில் வகுப்பறை இருக்கைகள் அமைக்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு தொடர்பாக தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை “சினிமா காட்சியைப் பார்த்து எடுக்கப்பட்ட நிர்வாக முடிவு” என பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:
“திராவிட மாடல் அரசு, மாணவர்களின் எதிர்காலத்தையும் உடல்நலத்தையும் பலியாக்கும் திட்டங்களை அறிவித்து வருகிறது. ‘ப’ வடிவ இருக்கை என்பது அதற்குக் கடும் எடுத்துக்காட்டு. வகுப்பறையில் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் மாணவர்கள், கரும்பலகையைப் பார்க்கும் அளவுக்கு தங்கள் கழுத்தையும் தோளையும் நாள்தோறும் சாய்த்து வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது செர்விக்கல் ஸ்பாண்டிலிட்டிஸ் போன்ற முடிவிலி வகை பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். கண்ணாடி அணியும் மாணவர்களுக்கு கூடுதல் கண அழுத்தம், தலைவலி, பார்வைத் திறன் குறைபாடு போன்ற விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.”
இது பற்றி மேலும் அவர் கூறியதாவது:
“இந்த உத்தரவை எடுக்கும் முன் உடல்நல, கல்விசார் தாக்கங்கள் பற்றி ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்க, மலையாள படமான ‘Sthanarthi Sreekuttan’-ல் வந்த ஒரு காட்சியை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்துவ? 2006-ல் இலங்கையில் இதே மாதிரியான இருக்கை முறையில் 23% மாணவர்கள் 45 டிகிரிக்கு மேல் தலையை திருப்ப, சீரிய உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. இது போலவே அன்பில் மகேஷ் கல்வி அமைச்சராக சினிமா ரசிகர் மன்ற தலைவராக இருந்த மனநிலையுடன் செயல்படுவது வெட்கக்கேடானது” என கூறியுள்ளார்.
வகுப்பறைகள் கட்டுவதில், ஆசிரியர்கள் நியமனத்தில், அடிப்படை கல்வித் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தாத கல்வித் துறை, இப்போது மாணவர்களின் உடல்நலத்தையும் கல்வி தரத்தையும் ஆபத்தில் தள்ளும் திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “இனி கல்வித் துறையை சினிமா பாத்து அல்ல, மாணவர்களின் நலனை வைத்து நிர்வகிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
