இந்தியாவின் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய மேலாண்மை கழகம் (IIM) – கொல்கத்தாவில்  படிக்கும் மாணவி ஒருவர், ஹாஸ்டல் வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், ஹரிதேவ்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் செய்ததாக கூறப்படும் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது: “மாணவி தனது புகாரில், ஒருவன் தனது ஹாஸ்டலுக்கு ‘கவுன்சிலிங் செஷனுக்காக’ அழைத்ததாக தெரிவித்துள்ளார். அங்கு அவர் குடித்த பானத்தில் மயக்குமருந்து கலந்து கொடுக்கப்பட்டதால் அவர் மயங்கியுள்ளார். பின்னர் விழித்தபோது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.” மேலும், “இதை எங்கும் வெளியிடினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என குற்றவாளி பயமுறுத்தி மிரட்டியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்,” என்று போலீசார் கூறினர்.

இது தொடர்பாக குற்றவாளியான மாணவர் கடந்த இரவு கைது செய்யப்பட்டதாகவும், தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவியை மடக்கி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்ததிலிருந்து சுமார் இரண்டு வாரங்களில் மீண்டும் நடைபெற்றிருப்பது, மாநிலம் முழுவதும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் பாதுகாப்பில் உள்ளனரா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.