அகமதாபாத் விமான நிலையத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா 171 விமான விபத்து சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், விபத்துக்கான காரணங்களில் பைலட்ட்கள் தவறே முதன்மையாக காரணம் என சில கருத்துகள் பதிவாகியிருந்தன.
ஆனால், இந்த அறிக்கையை இந்திய விமானிகள் சங்கம் (IAIPA) கடுமையாக மறுத்துள்ளது. இந்த அறிக்கையில் குற்றச்சாட்டுகள் ஒருபுறமாக மற்றும் நேரடி ஆதாரமின்றி வைக்கப்பட்டுள்ளதாக விமானிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
விசாரணை அறிக்கையிலுள்ள கருத்துகள், பைலட்ட்களை நேரடியாக குற்றவாளிகளாக சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது முற்றிலும் வெளிப்படைத்தன்மையின்றி தயாரிக்கப்பட்டதாகவும் விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவத்துக்கான காரணங்களை முழுமையாக ஆராயாமல், விமானிகள் மீது மட்டும் குற்றம் சுமத்துவது தவறான முன்னோடியை ஏற்படுத்தும் என கண்டனம் தெரிவித்துள்ளனர். முக்கியமாக, இந்த அறிக்கையில் விமானிகள் சங்கத்தினர் பார்வையாளர்களாக கூட சேர்க்கப்படவில்லை என்பது வேதனையுள்ளதாகவும், அதனை விமானிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட அந்த விசாரணை அறிக்கை, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல், லீக் செய்யப்பட்டதாகவும், அதில் எந்த அரசு அதிகாரியின் கையெழுத்தும் இல்லாமல் இருப்பது கேள்விக்குரியதாகவும் விமானிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த அறிக்கை முழுவதும் விமானிகள் மீதான பொறுப்பை ஏற்றி, ஏர் இந்தியா நிறுவனமே தவிர்க்கப்படும் வகையில் உள்ளது என விமானிகள் சங்கம் வெளிப்படையாகக் கூறியுள்ளது. பைலட்ட்கள் மீது தவறான கருத்தை பொது மக்களிடம் உருவாக்கும் முயற்சி நடக்கிறது எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சூழலில், விபத்து தொடர்பான விசாரணை முழுமையாக, வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான தவறான அறிக்கைகள் விமானப் பயணங்களின் பாதுகாப்பையும் விமானிகள் மனநிலையையும் பாதிக்கக்கூடியவை என்பதால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
