
அறநிலையத்துறை நிதியை கல்லூரி கட்ட பயன்படுத்தி திமுக அரசு சதி செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருக்கோவில்கள் சார்பில் 25 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 2245 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். உணவு, கல்வி, மருத்துவரத்திற்கு அதிக கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
1000 ஆண்டுகளுக்கு முன்பே கோவில்களில் கல்விச்சாலையும், மருத்துவச்சாலையும் மன்னர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகம், கோயில் கட்டிடக்கலையை கொண்டு கட்டிக் கொள்ளலாம் என சட்டத்தில் இடம் உள்ளது என்று தெரிவித்தார். இந்த இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள்தான் படிக்கின்றனர்.
திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டு 25 ஆயிரம் பேர் படிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி கோவில்கள் நிதியில் கல்வி நிறுவனங்கள் தொடங்கலாம். கேரளா ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கோவில் நிதியில் கல்லூரிகள் இயங்குகின்றது என்றும் தெரிவித்தார்.