சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனை கடுமையாக கண்டித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை மீறியதற்காக ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

ராயபுரம் பகுதியில் விதிமீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க 2021ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதிலிருந்து, முன்னாள் கவுன்சிலர் மற்றும் வழக்கறிஞர் ருக்மாங்கதன் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஜூலை 8ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஶ்ரீராம் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த அபராதத்தை நிறுத்த கோரி கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்தரன், ஜூலை 9ஆம் தேதி மேல்முறையீடு செய்தார்.

வழக்கின் போது, தலைமை நீதிபதி ஶ்ரீராம் கடுமையாகக் கருத்து தெரிவித்து, “ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என நினைக்கிறாரா? நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் காட்டவா?” என எச்சரித்தார். மேலும், தவறான பிரமாண பத்திரத்திற்கு கையெழுத்திட்டதனால், அவர் மாநகராட்சியின் ஆணையராக தகுதி இல்லாதவராக இருக்கலாம் என்றும் விமர்சித்தார்.

அதேவேளை, குமரகுருபரன் ஜூலை 10ஆம் தேதி உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கின்  விசாரணை ஜூலை 10க்கு ஒத்திவைக்கப்பட்டது.