பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி கடந்த ஜூன் 24ஆம் தேதி அன்று பீகாரில் உள்ள தகுதியான குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் நகரமயமாதல், புலம் பெயர்தல், புதிய வாக்காளர்கள் மற்றும் வெளிநாட்டு சட்டவிரோத குடியேற்றவாசிகள் போன்றவற்றை கண்டறிய இந்த திருத்தம் முறை அவசியம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பலரும் இது ஆளுங்கட்சியின் சதி என கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆர்ஜேடி உச்ச நீதிமன்றத்தில் இந்த திருத்தத்திற்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது.

அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராக உள்ளார். இதுகுறித்து ஆர்ஜேடி முக்கிய தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது, “இந்த வாக்காளர் திருத்தப்பணி ஏன் பீகாரில் மட்டும் நடத்தப்படுகிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகள் தோல்விக்கு சாக்குப் போக்கு தேடுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும் தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்பட்டதாவது, பீகாரில் வாக்காளர் திருத்தப் பணிகள் முதல் கட்டம் சீராக முடிவடைந்ததாகவும் இந்த நடைமுறை ஆளும் கட்சிக்கு சாதகமாக நடத்தப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

வரும் ஜூலை மாதம் 25ஆம் தேதி ஆவணங்களை சமர்ப்பிக்க வாக்காளர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் வரைவு வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.