
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஆர்எஸ்எம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் பாஜக கட்சியின் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு ஆதங்கத்துடன் பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இதுவரை 24 லாக்கப் மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் தினந்தோறும் பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளும் வெளிவருகிறது.
நான் கட்சி நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டால் பாதிபேர் வணக்கம் கூட சொல்வதில்லை. போனை எடுத்தவுடன் சொல்லுங்கள் என்கிறார்கள். நான் கட்சி நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு கொண்ட போது அவர் என்னை தெரியவில்லை என்கிறார். நான் கடலூரை சேர்ந்த ஒரு பெண் நிர்வாகிக்கு போன் போட்ட போது அவர் என்னை அவரது நைனா என நினைத்து விட்டு ஒழுங்கா போனை வை என கூறிவிட்டார்.
கட்சியின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் முதலில் வணக்கம் சொல்லிவிட்டு பேச ஆரம்பியுங்கள் என்றார். தொடர்ந்து அவர் பேச மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஒரு துண்டு சீட்டை கொடுக்கவும் அதனை விட்டுவிட்டு வேறு டாப்பிக்கிற்கு மாறினார். மேலும் பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாறிய பிறகு தற்போது புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் தனக்கு கட்சியில் மரியாதை இல்லை என வெளிப்படையாக கூறியது பரபரப்பாக பேசப்படுகிறது.