பெங்களூருவில், முன்னாள் காதலிக்கு அநாகரிகமான செய்திகளை அனுப்பியதற்காக குஷால் என்ற இளைஞர், 8 முதல் 10 பேர் கொண்ட கும்பலால் கடத்தி, கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை குற்றவாளிகளில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதையடுத்து, வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதில், இளைஞரின்  துணி களைத்துப் போட்ட நிலையில் அடித்து, தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்த கும்பலை, ‘ரேணுகாஸுவாமி’ கொலை வழக்கைத் தூண்டியதாகவும், அதிலிருந்து தூண்டுகோல் பெற்றதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது கடந்த ஆண்டில் நடிகர் தர்ஷனின் நீண்டநாள் காதலியான பவித்ரா கவுடாவுக்கு தவறான செய்திகளை அனுப்பிய ரேணுகாஸுவாமி என்ற இளைஞர் கடத்தப்பட்டு, தர்ஷனின் நெருக்கமானவர்கள் கூட்டாக தாக்கி கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நடந்த இந்த தாக்குதல், அதே வழக்கின் சாயலில் நிகழ்ந்துள்ளது என்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

குஷால் என்பவர், இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்த மாணவி ஒருவருடன் சமீபத்தில் பிரிந்து விட்டார். அதன்பிறகு அந்த மாணவி வேறு ஒருவரை காதலிக்கத் தொடங்கினார். இதனால் மனமுடைந்த குஷால், அவருக்கு தொடர்ச்சியாக தவறான, ஆபாசமான செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளார். இதனால் மாணவி, தனது புதிய காதலரும் அவரது நண்பர்களும் சேர்ந்து குஷாலை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். சச்சினை சரிசெய்ய அழைக்கிறோம் என பொய் கூறி குஷாலை தனியாக அழைத்து, பின்னர் கடத்தி, வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த இந்த செயலை காவல்துறை தீவிரமாக எடுத்துள்ளது. இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலின்போது, “நீயும் ரேணுகாஸுவாமி மாதிரி முடிவுக்கு வரப்போற” என கூறி பயமுறுத்தியதும், தாக்கியவர்கள் சிரித்துக் கொண்டு அந்த கொலை வழக்கை நினைவு கூறியதுமாக வீடியோவில் உள்ளதை வைத்து, இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொடூர செயல் என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம், சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்திலும் கடும் கண்டனத்தையும், பயத்தையும் உருவாக்கியுள்ளது.