பீகார் மாநிலத்தின் கயாஜியில் உள்ள சஹாவாஜ்பூர் மத்திய வித்யாலயா பள்ளியில், ஒரு ஆசிரியரிடம் மாணவர் செய்த புகாருக்குப் பதிலடியாக, ஆசிரியர் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ரஞ்சன் ஸ்ரீவஸ்தவா என்ற ஆசிரியர், 5ஆம் வகுப்பு மாணவர்கள் சண்டையிட்டதை கண்டித்து, இருவரையும் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவர்களில் ஒருவர் கோபமடைந்து வீட்டுக்குச் சென்று தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை அழைத்து வந்தார்.

 

பின்னர், எந்தவொரு முன் எச்சரிக்கையும் இல்லாமல், மாணவரின் குடும்பத்தினர் நண்பர்களுடன் பள்ளிக்குள் நுழைந்து, ஆசிரியரைக் குச்சிகளால் தாக்கினர். தாக்குதலுக்கிடையில், அவர்களிடம் கெஞ்சிய பெண் ஆசிரியையையும் அவர்கள் அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் பீதியுடன் தத்தளித்தனர். தலையிட வந்த மற்றொரு ஆசிரியர் தர்மேந்திர குமாரும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் ஆசிரியர் ராகேஷ் ரஞ்சனுக்கு கை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருடன் காயமடைந்த ஆசிரியர்கள் இருவரும் கிஜ்ராசராய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்குத் தகவல் தெரிந்தவுடன் 112 எமர்ஜென்சி டயல் மூலம் போலீசார் விரைந்து சென்று நிலையை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பங்கஜ் குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். இது கல்வி அமைப்பின் மீது நேரடித் தாக்குதல் என்றும், ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.