பாதுகாப்பற்ற, தரமற்ற தலைக்கவசங்களை பயன்படுத்தும் நடைமுறையை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், BIS (Bureau of Indian Standards ) சான்று இல்லாத ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடுமையான அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், BIS சான்று இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்யும், விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அளவில் தடை செய்யப்பட வேண்டிய தரம் குறைந்த ஹெல்மெட்டுகள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதமாக மாநில அரசுகள் கடைத்தொறும் ஆய்வுகள் நடத்த வேண்டும் எனவும், அவசியமான இந்த  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. நாடெங்கும் நடைபெற்று வரும் ஆய்வுகளில் ஏராளமான BIS சான்று இல்லாத ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான சாலை போக்குவரத்துக்காக, BIS தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களையே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், தங்களது உயிரைப் பாதுகாக்கும் இந்த அடிப்படை கட்டுப்பாட்டை ஒழுங்காக பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டத்திற்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இந்த நடவடிக்கையை மக்களும், வியாபாரிகளும் உணர்ந்து செயல்படவேண்டும் என்பது அரசின் நோக்கமாகும்.